ஐராபாத்திலிருந்து இயங்கும் பாரத் பையோடெக் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் கோவாக்சின் தடுப்பூசிகளை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது. இந்த தடுப்பூசி தற்போது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்குகோவாக்சின் தடுப்பூசி செலுத்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள மத்திய மருந்து கட்டுப்பாடு அமைப்புக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை ஏற்று சிறுவர்களுக்கு தடுப்பூசி போட்டு பரிசோதிக்க அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி, பாட்னா மற்றும் நாக்பூரில் உள்ள மையங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனை நடைபெற உள்ளதாகவும் 525 சிறுவர்களுக்கு இவற்றை செலுத்தி பரிசோதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் இரண்டாவது கட்ட தகவல்களை மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு முன் இடைக்கால அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென பாரத் பையோடெக் நிறுவனத்திற்கு அறிவுத்தப்பட்டுள்ளது.